Monday, December 9, 2013



விஜய் தொலைகாட்சியில் தற்போது “என் கணவன் என் தோழன்” என்ற ஒரு நெடும்தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடரில் சமையல்காரன் ஒருவன் சமையல் போட்டி ஒன்றில் கலந்துகொள்ள குடும்பத்துடன் வெளிநாடு செல்கிறான். அந்த போட்டியில் தொடர்ந்து வெற்றிபெற்றுவரும்போது இடையே கோழி ஓன்று கொடுக்கப்பட்டு அதை வைத்து சமையல்செய்ய கேட்டுகொள்ளபடுகிறது. அவன் உடனே அசைவ உணவானது இந்திய பண்பாடு மற்றும் கலாசாரத்திற்கு எதிரானது என கூறி அதை சமைக்காமல் போட்டியில்லிருந்து வெளியேறுகிறான். இருப்பினும் ஒட்டுஎடுப்பின் மூலம் மீண்டும் அவனுக்கு  வாய்ப்பு கொடுக்கப்பட்டு அவன் அந்த போட்டியில் வெற்றிபெறுகிறான். ஒரு சாதாரண நெடும்தொடர் மூலம் எப்படி ஜாதி வெறியையும் துவேஷத்தையும் மக்களிடயே பரப்பபடுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்தியாவில் சைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் ஏதோ “இந்திய பண்பாடு மற்றும் கலாசாரத்தை” காப்பாற்றுவதற்காக சைவ உணவை உண்பதில்லை. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்ததினல்தான் இந்த பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். இதுமட்டுமல்ல இந்தியர்கள் அனைவரும் பின்பற்றும் மதம், பேசும் மொழி மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் எல்லாம் பிறப்பால் வருவதுதான். இதில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களின் கலாசாரம் மட்டும்தான் இந்திய கலாசாரம் என்று கூறுவது அவர்களுடைய ஜாதி வெறியை மட்டும்தான் காட்டுகிறது. அசைவம் உண்ணும் பழக்கம் தமிழகத்தில் புறநானுறு  (1000 BCE – 300 CE). காலத்திலிருந்தே உள்ளது. ரிக் வேதத்தில் (500 BCE) ஆரியர்கள் குதிரை மற்றும் மாட்டின் மாமிசங்களை கடவுளுக்கு படைத்து தாங்களும் உண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அசைவ உணவுகளை உண்ணக்கூடாது என்று கொள்கையை முதன்முதலில் இந்தியாவில் கடைபிடித்தவர்கள் புத்த மற்றும் சமண மதத்தவர்கள்தான். நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் இந்திய மன்னர்களிடையே  இந்த இரண்டு மத குருமார்களுக்கு இருந்த ஆதிக்கத்துடம் போட்டிபோடமுடியாமல் “வைஷ்ணவா” மற்றும் “சைவா” மத குருமார்கள் வேறு வழியில்லாமல் அசைவ உணவுகளை தவிர்க்க ஆரம்பித்தார்கள். ஆகவே சைவ உணவு பழக்கம் என்பது இந்திய வரலாற்றில் அதிகார போட்டியில் வந்த ஒரு கலாசாரம் ஆகும். தற்போது சைவ உணவு பழக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கலாசாரத்தை  மட்டும்தான் சுட்டிகாட்டுமே  தவிர ஒட்டுமொத்த இந்தியாவின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை குறிப்பிடாது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் 10 விழுக்காடுக்கு குறைவான மக்களே இந்த உணவு பழக்கத்தை கடைபிடித்துவருவதால் இதை இந்திய பண்பாடு மற்றும் கலாசாரத்தில் ஒரு அங்கம்மாகக்கூட ஏற்று கொள்ளமுடியாது என்பதை இந்த நெடும்தொடரை தயாரிப்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.